இந்த வயதான குழந்தைக்கு...
என் வயதொத்த ஒருவன்
உன்னை 'பாட்டி' என்றழைக்கயில்
பகீரென்றதெனக்கு...
அவசரமாய் ஆராய்ந்தேன்.
தலையில் கால்வாசி நரைகள்
தோல்களில் சுருக்கங்களின் ஆரம்பம்,
கன்னக்குழி கொஞ்சம் பெரிதாய்
சில மாதங்களுக்கு முன்
விழுந்த முத்துக்களால்...
உணரவில்லை அப்போதும்..
உன் சமையலில் சத்திருந்தபோதும்
நினைவு மறதியால்
ருசி குறைந்திருந்தது...
உணரவில்லை அப்போதும்..
நடுநிசியிலும் நிமிடத்தில்
பசியாற்றிடுவாய்...இன்று
தன்னை மறந்து துயில்கையில்
உணரவில்லை அப்போதும்..
மருந்துசீட்டுகளும்
மாத்திரைபட்டைகளும்
மாடத்தை நிறைத்தும்...
உணரவில்லை அப்போதும்..
கட்டியென கத்தரித்த
கருப்பையை மருத்துவர்
காட்டுகையில் சிலிர்த்ததெனக்கு.
எத்தனை பாதுகாப்பாய் வளர்த்திருக்கிறாய்.
உணரவில்லை அப்போதும்..
மறுமுறை
அவன் 'பாட்டி'என்றழைக்கயில்
மிக ஆழமாய் உணர்த்தபட்டேன்....
என்றும் எங்களை
குழந்தையாய் நீ பார்ப்பதால்
உன் முதுமை
உணராமல் விட்டேனோ..??
முதுமையே நீ,
முடிந்தவரை முயன்றாலும்
துளியளவும் தடையிடயிலாது உன்னால்...
அவள் அன்பின் மழைக்கு.
முதுமை பயம் வேண்டாமுனக்கு...
உன்,
தேகத்தளர்வுகளை அன்புகொண்டு இறுக்கி
முனகவைக்கும் நினைவுகளுக்கு செவிகொடுத்து
இனிக்கும் நினைவுகள் பலகேட்டு
'அம்மாச்சி''அப்பாச்சி' எனும் குரல்கள் ஒலிக்க
அனுபவங்களுக்கும் அறிவுரைகளுக்கும் அடிக்கடி அணுகி
தனிமை தவிர்த்து
காலனுக்கு சவால்விட்டு
உன்..
முதுமையை இனிமையாக்குவோம்.
இறைவா,
மறுபிறவியில் மனமில்லை
இப்பிறவியிலேயே
நீட்டித்துவிடு....
தாயாகும் வாய்ப்பை.
இந்த வயதான குழந்தைக்கு..
சீனிவாசன் ஆளவந்தார்