Wednesday, October 14, 2009
Tuesday, June 02, 2009
ஆலமரம் இல்லா விழுதுகள்
அப்பா ...
நாட்களில்
நமத்து விடாமல்....
காலங்களில்
கணத்துகொன்டிருக்கிறது,
உன் நினைவுகள்.
பிஞ்சு பருவத்தில்
தந்தையிழந்த நீ..
தளராமல்
தாயோடு பகிர்ந்து கொண்டாய்
குடும்பச்சுமையை.
வரப்பு புற்களும்
கறவை மாடும்
உன் படிப்பை வளர்த்தன.
தூக்குவாளி கூழ்
உன் தேகம் வளர்த்தது.
பட்டபடிப்பு ஆசையும்
பறக்கவிட்டாய் .. சகோதரன்
படிப்புக்காய்.
இன்றும்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்..
பத்தாம் வகுப்பில் நீ எடுத்த
100/100 மதிப்பெண் சான்றிதழை.
தாமடைந்த
துயரங்கள்
தம் பிள்ளைகளுக்கு கூடாதென
பொறுப்போடும்
முனைப்போடும்
உயரம் எட்டினாய் நீ...
குடிசை வாழ்க்கையை
பாசத்தாலும்
உழைப்பாலும்
நிறைத்து நிறைத்து கல்வீடாக்கினாய்.
மொட்டை மாடி
நிலா இரசித்து
நீ சொன்ன நெடுங்கதைகள்
நெஞ்சைவிட்டு நீங்கமறுக்கிறது.
ஏழு அதியசங்களில் கால்பதித்தாலும்...
நீ கூட்டிபோன
நம் குலசாமி சுற்றுலாக்கு நிகராகாது.
சீஸ் பர்கரும், பீசா'வும்...
நீ வாங்கிவந்த
பட்டாணி, வறுகடலைக்கு நிகராகாது.
முனியப்பராய்
மிரட்டும் நீ....
கண்களில் குளம்கட்டி நிற்பாய்..
என் சிறு காய்ச்சலில்.
எதிர்பாராத தருணத்தில்
மரணக்கயிறு
மாரடைப்பாய் வீசப்பட,
கண்களில்
எங்கள் எதிர்காலம் உறைந்திருக்க
நொடிப்பொழுது
செய்வதறியமால் நீ செயலிழந்துவிட
இரக்கமில்லாத இறைவன்
கண்முன்னே கொன்றுவிட்டான்
எங்கள் சந்தோஷத்தை.
மௌனமாய்
விழுது
அழுது கொண்டிருக்கிறது...
ஊன்றயுதவிய ஆலமரத்தை
தாங்கிட தருணம் தரப்படவில்லை என...
Posted by seenu at 6:19 PM 18 comments
Labels: மரம் இல்லா விழுதுகள்