^^^^^^^^ அப்பாசாமி ^^^^^^^
உன்
செயலிலும்,
கனவிலும் ,
உழைப்பிலும்,
கண்ணிலும்,
இப்படியாய் தான் உணர்த்துவாய்.
பாசத்தை பகிரங்கபடுத்த
தெரியாதுனக்கு.
அறியா வயதில்,
தெரியாமல் வெந்நீர் தெறித்திட்டதால்,
துளிநேரம் நினைவிழந்தபோது...
தேகம் நடுங்க,
நான் 'அப்பா' சாமி...
நான் 'அப்பா' வந்திருக்கேன் சாமி...
என்றெல்லவா கதறியழுது சாமியாக்கினாய்.
பண்டிகை நாட்களும்,
மதிப்பெண் சான்றிதழ் தரும் நாட்களும்,
நீ கவலையை மறக்கும் நாட்கள்.
அன்றையை,
உன் புன்சிரிப்புக்காக
தினமும் தேர்வெழுத தயாராயிருந்தேன்...
சர்க்கரை சாப்பிட
விரும்புவது அனைவரின் இயல்பு.
ஆனால்
சர்க்கரை உன்னை சாப்பிட
விரும்பியதின் விநோதம் புரியவில்லை.
மரண நிகழ்வுகளிலும், ஈம சடங்குகளிலும்
நான் இல்லாமல் பார்த்துகொன்டாய்.
உன் மரணம் உட்பட.
"நான் இருக்கிறேன்"
என்றுன்னைபோல் தன்னம்பிக்கை சொல்ல,
இனி இங்கில்லை எவரும்.
என் கைபிடித்து
வழிக்காட்டிய உன் கைகளுக்கு,
உன் நடைதளரும் வேலையில்,
நான் தோள்கொடுக்க வேன்டாமா?
என்ன அவசரம் உனக்கு?
என்னை விடவா,
அந்த ஆண்டவன் உன்மேல்
அன்பு வைத்தான்...?
நிகழ்வது சாத்தியமில்லை என்றாலும்,
நிசப்தமாய் கேட்கிறேன்...
என் "அப்பாசாமியே"
நாளையவது வந்துவிடு.
நிறைய பேச வேன்டும்.
- சீனிவாசன் ஆளவந்தார்.